Friday, December 16, 2022

பேரின்பம்

பிஞ்சுப்பொதி - என்
நெஞ்சுமுட்டி கழுத்து கட்டிச் சிரிக்கையில் - அழுத்திய
நெஞ்சுச் சுமைகள்
பஞ்சுப் பொதியெனப் பறந்தன - கொளுத்திய வீண்
வஞ்ச சதிகள் மறந்தன

எஞ்சி நிற்கும் இக்கணம்
எங்ஙனம் என்றரியாது
இங்ஙனம் மட்டும் புரியுது

இது இன்பம்! பேரின்பம்!!

Saturday, June 8, 2019

பொய்த்துறவு

அத்தனையும் அடைய
    ஆத்திரம் கொண்டு அலைகிறேன்
தென்படுவனவெல்லாம் தின்றிட
    தரித்திரம் கொண்டு திரிகிறேன்
காலவெளிக்கோலம் சமைத்த
    சரித்திரம் கண்டு பொறிகிறேன்
தரித்திரங்கள் தந்த ஆத்திரங்கள் விளைத்த
    கையறு நிலையில் நின்று எரிகிறேன்

Monday, August 1, 2016

வேடதாரி

கனவுகளுக்கிடையில் விழித்துக் கொண்டும்
நினைவுகளுக்கிடையில் விழிப் பிதுங்கிக் கொண்டும்
காலவெளியில் சென்றுகொண்டிருக்கும்
ஓர் நீள்நெடிய பயணம்

பாதைகள் பல கிளைக்கின்றன,
எதில் செல்ல;
போதைகள் சில விழைகின்றன,
எதனை வெல்ல;
காதைகள் சில விளைகின்றன,
எவற்றைச் சொல்ல;
ஏதம் அறிகிலேன்
ஏதும் புரிகிலேன்

போதையாய்ப் பல விசனங்கள், அந்தப்
போதையில் கீதையாய்ச் சில வசனங்கள்;
முட்டாள் என்றுணர்ந்த மேதையாய்க் கோலம் தருகிறேன்
விட்டால், பற்றும் துறந்த ஞானியெனவும் சாட்சி பெறுவேன்
சுட்டால் சுடலை சேரும் இவ்வுடலையும்
மற்றும் யாவையும் துறந்து சாமியெனவும் காட்சி செய்வேன்

Saturday, January 11, 2014

நாணம்

அவளின் துகில் கூட
எதேச்சையாக எனைத் தொட்டபோதும்
எள் என்பதற்குள் எனை நீங்கியது...

பாவையின் விழியோ
பாவி என் கண் பாவைப் படும் முன்
பட்டென விலகியது...

பேதையின் கருங்குழலோ
பாதையில் நான் நெருங்குவதற்குள்
முறுக்கிக்கொண்டு அவளை முந்தியது...

சட்டென்றுதான் உறைத்தது
ஈதனைத்தும் என் நாணம் எனக்குத்
தோற்றுவித்தக் காட்சிப் பிழை என்று!!

Friday, February 1, 2013

காமாலை இரவு

மேகம் இல்லா இரவு வானம்...
எனைப் பார்த்து சிமிட்டும் மீன்களின் கண்கள்,
தெரு விளக்குகள் தந்தக் காமாலையால்
மஞ்சள் பூத்திருக்கின்றன...
இருளையும் மஞ்சள் படுத்தி
மாசு படச் செய்துவிட்டோமோ!?


Friday, June 18, 2010

முடிவிலி

இத்தனை நாள் பிழைத்தேனோ
இனியும் இறப்பதற்கு
எத்தனை தான் உழைத்தேனோ
பொற்குடமேதும் நிறைப்பதற்கு

பின்னும் ஏதோ தயக்கம்
இறந்த பின்பும் தானோ மயக்கம்
நின்றிடும் தானே இயக்கம்
அறிந்தும் ஏனோ கலக்கம்

தன்னழிவின் சாத்தியம் சொற்பம்
இறைக்கும் இதுவோ குழப்பம்
இருந்தும் உண்டோ நிறுத்தம்
இருத்தும் விசையின் விருப்பம் ?

Tuesday, December 15, 2009

தமிழ் மறவன்

நான் ஒரு கோழை
தைரிய தனம் குன்றிய ஏழை
மூவேந்தன் வழி வந்த வாழை
என் கை அறிந்ததில்லை வாளை
இடர் நேரிடும் வேளை
காக்க வல்லனோ ஒருவரேனும்?

பாரி பரம்பரையில் பிறந்திட்டப் பரதாரி நான்
வாரி இறைத்து வாங்கிய பெயரை
கூறிட்டுக் கூவி விற்கும் வியாபாரி காண்

சோழன் வழி வந்திட்டதாய் மார் தட்டி
உண்மை உரைக்க மறுக்கிறேன்
கோழையாய் உழலும் என் நிலை
வெளி க் கொணர வெறுக்கிறேன்

முல்லைக்குத் தேர் கொடுத்தக் குலத்தோன்றலுக்கு இன்று
பிள்ளைக்குப் பிடி சோறு கொடுக்க மனத் தோன்றலில்லை

Wednesday, November 26, 2008

வெண்ணிலவு

வான தேவியின் கருநுதலில் 
    எடுப்பாய்
கதிரவன் இட்ட 
    வெண்ணிற பொட்டு