Monday, August 1, 2016

வேடதாரி

கனவுகளுக்கிடையில் விழித்துக் கொண்டும்
நினைவுகளுக்கிடையில் விழிப் பிதுங்கிக் கொண்டும்
காலவெளியில் சென்றுகொண்டிருக்கும்
ஓர் நீள்நெடிய பயணம்

பாதைகள் பல கிளைக்கின்றன,
எதில் செல்ல;
போதைகள் சில விழைகின்றன,
எதனை வெல்ல;
காதைகள் சில விளைகின்றன,
எவற்றைச் சொல்ல;
ஏதம் அறிகிலேன்
ஏதும் புரிகிலேன்

போதையாய்ப் பல விசனங்கள், அந்தப்
போதையில் கீதையாய்ச் சில வசனங்கள்;
முட்டாள் என்றுணர்ந்த மேதையாய்க் கோலம் தருகிறேன்
விட்டால், பற்றும் துறந்த ஞானியெனவும் சாட்சி பெறுவேன்
சுட்டால் சுடலை சேரும் இவ்வுடலையும்
மற்றும் யாவையும் துறந்து சாமியெனவும் காட்சி செய்வேன்

No comments:

Post a Comment