Tuesday, December 15, 2009

தமிழ் மறவன்

நான் ஒரு கோழை
தைரிய தனம் குன்றிய ஏழை
மூவேந்தன் வழி வந்த வாழை
என் கை அறிந்ததில்லை வாளை
இடர் நேரிடும் வேளை
காக்க வல்லனோ ஒருவரேனும்?

பாரி பரம்பரையில் பிறந்திட்டப் பரதாரி நான்
வாரி இறைத்து வாங்கிய பெயரை
கூறிட்டுக் கூவி விற்கும் வியாபாரி காண்

சோழன் வழி வந்திட்டதாய் மார் தட்டி
உண்மை உரைக்க மறுக்கிறேன்
கோழையாய் உழலும் என் நிலை
வெளி க் கொணர வெறுக்கிறேன்

முல்லைக்குத் தேர் கொடுத்தக் குலத்தோன்றலுக்கு இன்று
பிள்ளைக்குப் பிடி சோறு கொடுக்க மனத் தோன்றலில்லை

Wednesday, November 26, 2008

வெண்ணிலவு

வான தேவியின் கருநுதலில் 
    எடுப்பாய்
கதிரவன் இட்ட 
    வெண்ணிற பொட்டு

Thursday, May 22, 2008

மதி மயக்கம்

ஈ மொய்க்கும் மலரொப்ப-விண் 
மீன் மொய்க்கும் மகளாய்
மஞ்சள் மதி

மலர் தீண்டும் தென்றலீடாக-என்
மனம் கோதும் விரல்களாய்
வெள்ளொளிக் கிரணங்கள்

பார் தறித்த போர்வைமேல்
பால் தெளிக்கும் போக்காய்
மதிமங்கையின் நடை

மாயவித்தகன் ஆட்டுவிக்கும் பதுமைபோல்-என்
தூயசித்தம் கெட்டுவிட்டு சிதரவைக்கும்
வான்மகளின் நளினங்கள்

குளிர்கூசி சிலிர்க்கும் சிறுவனாய்
நாணங்கூசி நெளிந்து நிற்கிறான்-கடலரசன்
நிலாமகள் நகைக்கண்டு

Thursday, May 15, 2008

கானல் நீர்

எரிக்கும் பாலைமணலில்-வாயு
வார்த்திட்ட வகிட்டுச் சித்திரமாய்
வான்மகள் சேலையில் முகிற்கோலம்

Sunday, February 10, 2008

உழவு

உதிரம் உதிராக் குறையென
வேர்வையூற்றி வேரூன்றச் செய்து
நிலம் பார்த்து நீர்பாய்ச்சி
சேறுபூசி சேர்ந்து வயலாடி
வயல் பார்த்து உரமிட்டு
கண்விழித்துப் பயிர் வளர்த்து
நிலமகளுக்குப் பச்சைத் துகிற் பரிசளித்தான்...

Monday, December 17, 2007

பூக்காடு

மனங்கசந்து கண்கலங்கிய
தருணமெண்ணி இதழ்முறுவல் பூக்கும்...
கூடியாடி களித்துகுதித்த
காலமெண்ணி இமைதுளி பூக்கும்...

Tuesday, October 30, 2007

மரம்

கலமேந்தி களங்கள் பார்த்தான்
    புலங்கள் நிறுத்தினான்
உளைவேக அடுப்பனல் வளர்த்தான்
    வளங்கள் பெருக்கினான்
தன்குடைகீழ் குடிகள் காத்தான்
    கொடிகள் தாங்கினான்
கூர்முனைகட்கு மார் காட்டினான் 
    வெட்டுண்ணப் பிறந்தவன் 
மறைவழுவா முறைதவறா நெறிபிறழா
    மறமுடை மரமாமவன். 

மரத்திற்கும் மறவனுக்கும் இடையில் ஒரு சிலேடை.

பயங்கொள்ளி பாரதி

கருத்துகள் ஒன்று
சிந்தனைகள் ஒன்று
கொள்கைகள் ஒன்று
கோபங்கள் ஒன்று
எனக்கும் அவனுக்கும்
ஆனால்...
நான் பயங்கொள்ளி...
அவன் பாரதி!!!