Saturday, January 11, 2014

நாணம்

அவளின் துகில் கூட
எதேச்சையாக எனைத் தொட்டபோதும்
எள் என்பதற்குள் எனை நீங்கியது...

பாவையின் விழியோ
பாவி என் கண் பாவைப் படும் முன்
பட்டென விலகியது...

பேதையின் கருங்குழலோ
பாதையில் நான் நெருங்குவதற்குள்
முறுக்கிக்கொண்டு அவளை முந்தியது...

சட்டென்றுதான் உறைத்தது
ஈதனைத்தும் என் நாணம் எனக்குத்
தோற்றுவித்தக் காட்சிப் பிழை என்று!!

Friday, February 1, 2013

காமாலை இரவு

மேகம் இல்லா இரவு வானம்...
எனைப் பார்த்து சிமிட்டும் மீன்களின் கண்கள்,
தெரு விளக்குகள் தந்தக் காமாலையால்
மஞ்சள் பூத்திருக்கின்றன...
இருளையும் மஞ்சள் படுத்தி
மாசு படச் செய்துவிட்டோமோ!?


Friday, June 18, 2010

முடிவிலி

இத்தனை நாள் பிழைத்தேனோ
இனியும் இறப்பதற்கு
எத்தனை தான் உழைத்தேனோ
பொற்குடமேதும் நிறைப்பதற்கு

பின்னும் ஏதோ தயக்கம்
இறந்த பின்பும் தானோ மயக்கம்
நின்றிடும் தானே இயக்கம்
அறிந்தும் ஏனோ கலக்கம்

தன்னழிவின் சாத்தியம் சொற்பம்
இறைக்கும் இதுவோ குழப்பம்
இருந்தும் உண்டோ நிறுத்தம்
இருத்தும் விசையின் விருப்பம் ?

Tuesday, December 15, 2009

தமிழ் மறவன்

நான் ஒரு கோழை
தைரிய தனம் குன்றிய ஏழை
மூவேந்தன் வழி வந்த வாழை
என் கை அறிந்ததில்லை வாளை
இடர் நேரிடும் வேளை
காக்க வல்லனோ ஒருவரேனும்?

பாரி பரம்பரையில் பிறந்திட்டப் பரதாரி நான்
வாரி இறைத்து வாங்கிய பெயரை
கூறிட்டுக் கூவி விற்கும் வியாபாரி காண்

சோழன் வழி வந்திட்டதாய் மார் தட்டி
உண்மை உரைக்க மறுக்கிறேன்
கோழையாய் உழலும் என் நிலை
வெளி க் கொணர வெறுக்கிறேன்

முல்லைக்குத் தேர் கொடுத்தக் குலத்தோன்றலுக்கு இன்று
பிள்ளைக்குப் பிடி சோறு கொடுக்க மனத் தோன்றலில்லை

Wednesday, November 26, 2008

வெண்ணிலவு

வான தேவியின் கருநுதலில் 
    எடுப்பாய்
கதிரவன் இட்ட 
    வெண்ணிற பொட்டு

Thursday, May 22, 2008

மதி மயக்கம்

ஈ மொய்க்கும் மலரொப்ப-விண் 
மீன் மொய்க்கும் மகளாய்
மஞ்சள் மதி

மலர் தீண்டும் தென்றலீடாக-என்
மனம் கோதும் விரல்களாய்
வெள்ளொளிக் கிரணங்கள்

பார் தறித்த போர்வைமேல்
பால் தெளிக்கும் போக்காய்
மதிமங்கையின் நடை

மாயவித்தகன் ஆட்டுவிக்கும் பதுமைபோல்-என்
தூயசித்தம் கெட்டுவிட்டு சிதரவைக்கும்
வான்மகளின் நளினங்கள்

குளிர்கூசி சிலிர்க்கும் சிறுவனாய்
நாணங்கூசி நெளிந்து நிற்கிறான்-கடலரசன்
நிலாமகள் நகைக்கண்டு

Thursday, May 15, 2008

கானல் நீர்

எரிக்கும் பாலைமணலில்-வாயு
வார்த்திட்ட வகிட்டுச் சித்திரமாய்
வான்மகள் சேலையில் முகிற்கோலம்

Sunday, February 10, 2008

உழவு

உதிரம் உதிராக் குறையென
வேர்வையூற்றி வேரூன்றச் செய்து
நிலம் பார்த்து நீர்பாய்ச்சி
சேறுபூசி சேர்ந்து வயலாடி
வயல் பார்த்து உரமிட்டு
கண்விழித்துப் பயிர் வளர்த்து
நிலமகளுக்குப் பச்சைத் துகிற் பரிசளித்தான்...